1. பேரரசுகளின் தோற்றம்
மகாஜனபதங்கள்
வேதகாலத்தின் இறுதியில், புதிய வளமான விளைச்சல் நிலங்களுக்காகவும், கனி வளங்களுக்காகவும், சிறு சிறுஆரிய அரசுகளான ஜனபதங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அதே நோக்கத்திற்காகக் கிழக்குநோக்கி முன்னேறவும் முற்பட்டனர். இதனால் கங்கைச் சமவெளியின் கிழக்கிலும், தெற்கிலும் இருந்துவந்தஆரியரல்லாத இனப்பிரிவுகளுடன் மோதல்கள் ஏற்பட்டன. இப்போராட்டங்களினால் சிறிய ஜனபதங்கள்போர்களில் தோற்கடிக்கப்பட்டதாலோ, தாமாகவே முன்வந்ததாலோ பெரும் மகாஜனபதங்களாக இணைந்தன.
மகாஜன பதங்கள் என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகும். இது பெரிய அரசுகளை குறிக்கும்சொல்லாகும். இம் மகாஜனபதங்கள் பற்றி புத்த இலக்கியங்கள் விரிவாக விளக்குகின்றன.
பல ஜனபதங்களை உள்ளடக்கிய பெரிய அமைப்பாக மகாஜனபதங்கள் உருவாக்கப்பட்டன. இனக்குழுஅமைப்பை விட மேம்பட்டு பரந்து விரிந்த அரசுகளாக மகாஜனபதங்கள் இருந்தன. புத்தர் வாழ்ந்த காலத்தில்வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இவற்றில் சில, பரம்பரை அரசர்களால் ஆளப்பட்டன. வேறுசில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் குழுக்களால்ஆளப்பட்டன. வைசாலி நகரைத் தலைநகராகக் கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள்இணைந்திருந்தன.
கோசலம், அவந்தி, வத்சம், மகதம் போன்றவை பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்களில் வலிமையானவை. இவை தங்களுக்குள்ளும், பிற குடியரசுகளுடனும் போரிட்டுக்
கொண்டிருந்தன. மகதம் பிற மகாஜன பதங்களை வென்று இறுதியில் பேரரசாக எழுச்சி பெற்றது. இன்றையபீகார் மாநிலத்தின் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி மகதம் என்று அழைக்கப்பட்டது. அதன் தலைநகராகமுதலில் சிராவஸ்வதி நகரமும் பின்னர் இராஜகிருகம் இறுதியாக பாடலிபுத்திரமும் இருந்தது.
மகாஜனபதங்கள்:
அங்கம்
மகதம்
கோசலம்
காசி
வஜ்ஜி
மல்லம்
கேதி
வத்சம்
குரு
பாஞ்சாலம்
மத்ஸ்யம்
சூரசேனம்
அஸ்மகம்
அவந்தி
காந்தாரம்
காம்போஜம்
மகதத்தின் எழுச்சி:
பிம்பிசாரர் - அஜாதசத்ரு:
அரியங்க வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர். மிகச்சிறிய அரசாக இருந்த மகதத்தைப் படையெடுப்புகள் மூலமும், திருமண உறவுகள் மூலமும் விரிவுபடுத்தி வலிமையான
ஓர் அரசாக மாற்றினார். பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு தனது தந்தையையே சிறையில் அடைத்துஆட்சியைக் கைப்பறினார். இவர் கோசலம், அவந்தி, வைசாலி ஆகிய மகாஜனபதங்களுடன் நீண்டகாலம் போர்செய்து வெற்றிபெற்று மகதத்துடன் இணைத்தார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும்அஜாதசத்ருவே ஆவார்.
சிசுநாகர்- மகாபத்மநந்தன்:
அஜாத சத்ருவுக்குப் பின் மகதத்தின் புகழை நிலை நாட்டிய குறிப்பிடத்தக்க அரசர் சிசுநாகர் ஆவார். இவரேஅவந்தி அரசரையும் முறியடித்தவர். வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாடு இவரது காலத்தில்தான்கூட்டப்பட்டது.
அரியங்க வம்சத்தை வீழ்த்தி, சிசுநாகர் ஆட்சியைப் பிடித்தார். சிசநாகர்களுக்குப் பின் நந்தவம்சத்தினர்ஆட்சிக்கு வந்தனர்.
இவர்கள் மகதத்தின் ஆட்சியை வட இந்தியா முழுவதும் பரப்பினர். மகாபத்மநந்தன் என்று முதல் நந்தமன்னர்விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றினார். இவர் சிந்துநதி முதல் தக்காணம்வரையில் பரந்து விரிந்த முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கினார். சமூகத்தின் கடைசி நிலையில்வைக்கப்பட்டிருந்த சூத்திரர்களான சிசுநாகரும், மகாபத்மநந்தனும் மன்னர்களாக அடுத்தடுத்து முடி சூடினர். அக்காலத்தில், இஃது ஒரு பெரும்புரட்சி எனலாம். நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண சமயத்தைப்போற்றுபவர்களாக இருந்தனர். கிரேக்க நாட்டைச் சேர்ந்த மாசிடோனிய மன்னன் அலெக்ஸாண்டர், இந்தியாவின் மேற்குப்பகுதி வழியாகப் படையெடுத்து வந்தார். நெடும் பயணத்தின் காரணமாக, வீரர்கள்களைப்புற்றதாலும்
நந்தர்களின் போர்த் திறத்தை அறிந்ததாலும் திரும்பிச் சென்றார்.
மௌரியப் பேரரசு:
சந்திரகுப்த மௌரியர் (கி.மு.320 - 298) நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில்வென்று மகதப்பேரரசை மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியர்
கைப்பற்றினார்.
அலெக்ஸாண்டர் தலைமையில் கிரேக்கர்களால் முன்னர்க் கைப்பற்றப்பட்டிருந்த மேற்கிந்தியப் பகுதிகளைவென்று மௌரியப் பேரரசுடன் இணைத்தார். இதனை எதிர்த்துப் படையெடுத்து வந்த செலூகஸ் நிகேடார்என்ற கிரேக்க
மன்னனையும் தோற்கடித்து, ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளையும் தமது பேரரசுடன்இணைத்துக் கொண்டார்.
செலூகஸ் நிகேடாரின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள்தங்கி, இந்தியாவைப்பற்றி, இண்டிகா என்றும் நூலை எழுதினார். சந்திரகுப்த மௌரியர் சமண சமயத்தைத்தழுவித் துறவியாகி, அரியணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச்சென்று விட்டார் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. அங்குச் சிரவணபெலகொலா பகுதியில் சமண சமயநம்பிக்கையின்படி தவமிருந்து உயிர்நீத்தார் எனவும் கூறப்படுகிறது.
அசோகர்
சந்திரகுப்த மௌரியருக்குப்பின், அவர் மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருக்குப்பின், அவரது மகன்களில் ஒருவரான அசோகர் மௌரியப் பேரரசரானார் (கி.மு. 273 - 236) முதல் நான்கு ஆண்டுகள், அரசராவதை எதிர்த்த தனது சகோதரர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதில் செலவிட்டார். அதன்பிறகு எட்டுஆண்டுகள்
கழித்து மௌரியப் பேரரசிலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தின் மீது படையெடுத்தார். கடும்போருக்குப்பின்கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தார்.
ஆனாலும் இப்போரில் அவர் கண்ட பேரழிவுக் காட்சிகள் அவரை மிகவும் கலங்கச் செய்தன. இனிப்போரிடுவதில்லை என்றும் உறுதி பூண்டார்.
அசோகரின் தர்மவிஜயம்:
குடிமக்களுக்கு உதவுவதும், அவர்களை நன்னெறிப்படுத்துவதும்தான் அரசனின் கடமைகளாக இருக்க வேண்டும் என்றும் அசோகர் கூறினார். தனது எஞ்சிய வாழ்நாளை மக்களைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும், அறவுரைகளைக் கூறுவதிலும் கழித்தார்.
படையெடுத்துப்போர் செய்து, வெற்றி பெறும் திக் விஜயத்தை வெறுத்தார். மக்களிடம் தர்மத்தை வளர்க்க இவர்மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள், தர்மவிஜயம் என்று குறிப்பிடப்படுகின்றன. சாதிமாத பேதமின்றிஅனைவருக்காகவும் சாத்திரங்களையம், மருத்துவமனைகளையும் கட்டினார். கால்நடைகளுக்கும்மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிர்ப்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன. தண்டனை விதிகளில் மனிதாபிமானத்துடன்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன, உயிர்வதைகள் தடுக்கப்பட்டன. கல்வெட்டுகளில் வட்டார மொழிகளிலேஎழுதி, அசோகர் தமது ‘தர்மத்தை’ மக்களிடையே பரவச் செய்தார். மக்களுக்கு உதவுவதற்காகவே, தர்மமகாமாத்திரர்கள் எனப்பட்ட சிறப்புப் பணியாளர்களை நியமித்தார். இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நலஅரசை உருவாக்கிய சிறப்பு அசோகரையே சேரும்.
அசோகரும் பௌத்தமும்:
அறிவு அன்பு ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய பௌத்த சமயத்தை அசோகர் தழுவினார். ஆனாலும்பிராமணர், அஜீவகர் போன்ற பிற மதப் பிரிவினரிடமும் கருணையுடன் நடந்து கொண்டார். பௌத்தசமயத்தைப் பரப்புவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். கபிலவஸ்து, சாரநாத், புத்தகயா போன்ற பௌத்தநினைவிடங்களைச் செப்பனிட்டு விரிவுப்படுத்தினார்.
நூற்றுக்கணக்கான தூபிகளையும், கல்தூண்களையும் அமைத்தார். இவர் பாடலிபுத்திரத்தில் மூன்றாவதுபௌத்த மாநாட்டைக் கூட்டினார். பௌத்த நெறியைப் பரப்புவதற்காகத் துறவியர் குழுக்களைப் பேரரசின்
பலபகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன் மகன்மகேந்திரன், மகள் சங்கமித்திரை ஆகியோரை அனுப்பினார். அசோகரது முயற்சியால் பௌத்த சமயம் ஓர்உலக சமயமாக மலர்ந்தது.
அசோகரின் கலைப்பணி:
சிந்துவெளி நாகரிகத்திற்குப் பிறகு இந்தியாவில் கிடைத்துள்ள மிகப்பழமையான நினைவுச்சின்னங்களும், கல்வெட்டுகளும் தூபிகளும், கற்றூண்களும் அசோகர் காலத்திற்கு உரியவையே. சாஞ்சி , சாரநாத் லும்பினிபோன்ற இடங்களில் காணப்படும் கலையழகு மிகுந்த மிகப்பெரிய பௌத்த தூபிகள் காண்போரை வியக்கவைப்பவையாகும்.
அசோகரால் நிறுவப்பட்ட கற்றூண்கள் ஒப்பற்ற கலையழகு மிக்கவை. அத்தூண்களின் வடிவமைப்பும், அதன்முகப்பிற்குக் கீழ்க் காணப்படும், தாமரை மலரைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தது போன்ற சிற்பவேலைப்பாடும் பாரசீகச் சிற்பக்கலையின் தாக்கத்தால் வந்தவை என்று சிலர் கருதுகின்றனர்.
அசோகரது கல்வெட்டுகள்:
குகைகளின் சுவர்களிலும், கற்றூண்களிலும், கற்பாறைகளின் மீதும் அசோகரது ஆணைகள் மற்றும்அறிவுரைகள் பொறிக்கப்பட்டுப் பேரரசின் பல பகுதிகளிலும் வைக்கப்பட்டன. பெரும்பாலான கல்வெட்டுகள்பிராகிருத மொழியல் எழுதப்பட்டவை, வடமேற்கு எல்லைப் பகுதியில் கரோஸ் என்னும் எழுத்திலும், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிரேக்க எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகரது போர் மறுப்பு, அறக்கொள்கை, மனிதநேயக் கருத்துகள் இக்கல்வெட்டுகளில் வெளிப்படுகின்றன.
மௌரியரின் ஆட்சி முறை:
அசோகரது பேரரசு, ஆட்சி வசதிக்காக ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
வடக்குப் பகுதிக்குத் தட்சசீலமும், மேற்குப் பகுதிக்கு உஜ்ஜயினியும், தெற்குப் பகுதிக்குத் தோசாலியும் தலைநகரங்களாக இருந்தன. பேரரசின் மையமான மகதத்தைப்
பேரரசரே பாடலிபுத்திரத்திலிருந்து ஆட்சி செய்தார்.
பேரரசருக்கு ஆலோசகர்களாக அமைச்சர்களும், படைத்தலைவர்களும் இருந்தனர். சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். மகாமாத்திரர் என்ற உயர் அதிகாரிகள் மாநிலங்களின்அதிகாரிகளாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர். இளவரசர்களும் மகாமாத்திரர்களாக நியமிக்கப்பட்டனர். யுக்தர், பிரதேசிகர், தூதர், ஒற்றர் போன்ற பிற அதிகாரிகளும் இருந்தனர். எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக்கண்காணித்தோர் அந்த மகாமாத்திரர் எனப் பட்டனர்.
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ தரும் மகாமாத்திரர்கள் இருந்தனர். நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள்இருந்தன. பாடலிபுத்திரத்தை 30 பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாக மெகஸ்தனிஸ் எழுதியஇண்டிகா என்ற நூல் கூறுகிறது. இவர்கள் 5 பேர் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவினரும்ஒரு குறிப்பிட்ட பொறுப்பினை ஏற்று ஆட்சி செய்தனர்.
மௌரியரது வலிமையான படை 30 பேர் கொண்ட நிர்வாகக் குழுவால் கண்காணிக்கப்பட்டது. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, கப்பற்படை போன்ற ஐந்து பிரிவுகளைக் குழுவின் 5 உட்குழுக்கள்நிர்வாகம் செய்தன. ஆறாவது உட்குழு இப்படைகளுக்கான போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, தளவாடங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தது.
மௌரியர்களின் நீதி நிர்வாகம் முதலில் மிகக் கடுமையானதாக இருந்தது. அசோகர் இதில் மனித நேயத்துடன்சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார், சித்திரவதை ஒழிக்கப்பட்டது. மரண தண்டனைக் கைதிகளுக்குஆறுதலளிக்கும் விதமாகப் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தார். சிறிய குற்றங்களுக்கான தண்டனைக்காலத்தைக் குறைத்தார்.
அரசரும் அதிகாரிகளும் தொடர்ந்து பயணம் செய்து மக்கள் குறைகளை நீக்குவதற்கு பல நடவடிக்கைகளைமேற்கொண்டனர்.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்ரகன் தன் படைத் தலைவர் புஷ்யமித்ரசுங்கனால் படுகொலைசெய்யப்பட்டார். இதற்குப்பின் ஏறக்குறைய 500 ஆண்டுகாலம் மகதம் வலுவிழந்து நின்றது.